A+ A-

நாடு முழுவதிலும் இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தென்படுகின்றன. - கல்குடாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு .






நாடு முழுவதிலும் இன்று சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல  சகுணங்களும் தெரிகின்றன அதனால் மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து  கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்ட ம் சனிக்கிழமை (9) கல்குடா தொகுதியில் நடைபெற்றபோது அதில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இது ஒர் அபூர்வமான மேடை. வழமைபோல் எங்கும் காணாத எத்தனையோ பேர் இந்த மேடையில் இருக்கின்றோம்.  இது நிகழ்வதற்கு காரணம் சஜித்பிரேமதாச என்கின்ற வெற்றி வேட்பாளர் என்றால் அது மிகையாகது.
வெவ்வேறு முகாம்களில் இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகளையும் இணைக்கின்ற ஒர் இணைப்புப் பாலமாக, சஜித் பிரேமதாசவை எங்களுடைய விருப்பத்துக்குரிய வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றோம்
1988ஆம் ஆண்டு சஜித்துடைய தந்தை ரணசிங்க பிரேமதாச இவரைப் போலதான். அன்றிருந்த ஐ.தே.கட்சி அரசாங்கம் தட்டில் வைத்து அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தாரைவார்க்கவில்லை கொஞ்சம் இழுத்தடிப்புச் செய்தார்கள். கடைசியில் அவர்  தோல்வியை தழுவட்டும் என்ற நோக்கத்துடனேயே வேட்பாளர் பதவியைக் கொடுத்தார்கள். அப்பொழுது வடக்கிலும் யுத்தம், தெற்கிலும் கிளர்ச்சி. வடக்கில் அகோர யுத்தம் தெற்கில் ஜே.வி.பி.யுடைய ஆயுதப் போராட்டம். இவற்றுக்கிடையில் வெற்றிவாய்ப்பே இல்லை என நினைத்தார்கள். 11 வருட கால  ஐ.தே.கட்சியின் கீழ் பலவிதமான விஷயங்களில் மக்கள் வெறுப்படைந்த நிலையில் ஒரு வேட்பாளராக நியமிக்கப்பட்ட ரணசிங்க பிரேமதாசவை இறுதி நேரத்தில் ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் எடுத்த முடிவு இந்த நாட்டின் தலைவிதியையே தலைகீழாக மாற்றியது.
பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பைப் பற்றி யாரும் கனவுகூட காணமுடியாத ஒரு நிலையில் இருந்த சந்தர்ப்பத்தில் அவரை மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில்  வெற்றிபெற வைத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியேயாகும்.
நான்கரை வருடமாக இருக்கின்ற  எங்களுடைய ஆட்சிக்காலத்தில் எவ்வளவுதான் அபிவிருத்தி செய்திருந்தாலும், மக்கள் மத்தியில் ஆங்காங்கே விமர்சனங்கள் இல்லாமலில்லை. இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு யுக மாற்றம் தேவை. அந்த யுக மாற்றத்திற்கான அடையாளம் சஜித் பிரேமாச என்று முன்கூட்டியே பேசத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். பேசுவது மாத்திரமல்ல ஐ.தே.கட்சியே முடிவெடுக்க இழுத்தடிப்புச் செய்து கொண்டிருந்தபோது அதை தைரியமாக எடுத்துச் சொல்லி அதன் மூலம் இந்த யுக மாற்றத்திற்கு வழிகோலியவர்களில் நானும் ஒருவன். அதனால்தான் நான் இன்று மிகவும் சந்தோஷப்படுகினறேன்.
நாடுமுழுவதிலும் இன்று எதிர்பாராத மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், சஜித் பிரேமதாசவுடைய கூட்டங்கள் எல்லாம்  இன்று மாற்றுத்தரப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் சிம்மசொப்பனமாகவும் மாறியிருக்கின்றது. வேறு வழியில்லமால் திரும்பவும் இனவாதத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். அப்பட்டமான இனவாதத்தை மேடைகளில் கக்குகின்றார்கள். மிக மோசமான, கீழ்தரமான, மட்டகரமான கதைகளை கதைக்கின்றார்கள்.
ஆனால் கொஞ்ச பேருக்கு நோன்புகாலத்தில் சைத்தானை கட்டிப்போடுகின்ற மாதிரி, அந்த பக்கத்தில் இனவாதம் பேசுகின்றவர்களை அடக்கி வாசிக்கமாறு சொன்னாலும், இடையிடையே அவர்களுடைய சுபாவமும் சுயரூபமும் வெளியியே வந்து விடுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு தாமதிக்கின்றது என்று அதையும் கொஞ்சம் பேசிக் கொண்டு திரிந்தார்கள். இப்போது அவர்களும் முடிவெடுத்தாகிவிட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கத்துடன் (9) காலையில் கதைத்தேன். அவர்கள் இன்றிலிருந்து வீடு வீடாகச் சென்று பிரச்சாரங்களை ஆரம்பிப்பதாகச் சொன்னார். சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைப்பதற்கான பிரசார வேலைகளை இன்று தொடக்கம் முழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரல்ல நாடு முழுவதிலும் செய்ய ஆரம்பித்துள்ளோம். அவர்களும் கூட்டங்களை போட்டு தங்கள் பக்க நியாயங்களை சொல்ல இருக்கின்றார்கள்.

நாடு முழுவதிலும் இன்று சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல  சகுணங்களும் தெரிகின்றன. மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர். ஒரு சில தனியார் ஊடகங்களிலேயே ஊதிப்பெருப்பிக்கின்ற பிரச்சாரத்தை செய்கின்றனர். இந்த தனியார் ஊடகங்கள் எப்படிப்போனலும் இன்று அரச ஊடகங்களிலும் அளவுக்கதிகமாகய் எங்களுடைய பிரசாரங்கள் பெரிதாக தூக்கிப்பிடிக்கப்படாமல் ஒரு யுக மாற்றம் மிக அமைதியாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
சஜித் பிரேமதாச போகின்ற இடங்களில் எல்லாம் ஆரவாரமாக கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒர் அமைதிப்புரட்சி அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் தான் நாங்கள் இன்று இந்த கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கு அப்பால் நடக்கப் போகின்ற விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எப்படியாவது இல்லாதொழிக்க வேண்டும் என்ற முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி பெரு விருப்பத்தோடு இருக்கின்றார் என்பதை அடையாளம் கண்டு கொண்ட எங்களுடைய பிரதமரும் கூட, எங்களுக்கும் தெரியாமல் திடீரென்டு நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறையை நீக்கிவிட்டால் என்ன என்று கடைசி நேரத்தில் ஒர்  அமைச்சரவை பத்திரத்தை கொண்டுவர முயற்சித்ததையும் நாங்கள் முறியடித்தோம்.
இதெல்லாம் ஐ.தே.கட்சிக்குள் கூட கடைசி வரையும் இருந்தது. இன்றைக்கு தன்னுடைய கட்சிக்குள்ளும் இப்படியான பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக மக்களின் தெரிவாக நாடு முழுதுதம் கூட்டம் நடத்தித்தான் தனக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டிய நிலவரம் ஏற்பட்டது இவருக்கு மட்டுமல்ல கோட்டாபாயவும் இப்படித்தான். அண்ணன் லேசாக கொடுக்கவில்லை. தம்பிக்கு இழுத்தடிது கிட்டத்தட்ட ஒரு வருடம் அவரும் ‘வியத்மக’ என்ற கூட்டம் போட்டு நாடு முழுக்க சுத்தியடித்து தனக்கு ஒர் ஆதரவு அலை இருப்பதாக பிரமையை ஏற்படுத்தித்தான் அந்த ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பறிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.
ஒரு ஜனாதிபதியின் மகன் என்ற காரணத்தினால் அந்த ஜனாதிபதி ஆட்சியில் இருக்கின்ற காலத்தில் பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்கி அரசியல் செய்வதற்கு பழக்கப்பட்டவர் அல்லர். சஜித் பிரேமதாச தன்னுடைய தந்தை கொலையுண்ட பிற்பாடு தந்தையுடைய தொகுதியான கொழும்பு மத்தியைக்கூட ஐ.தே.கட்சி அவருக்கு கொடுக்கவில்லை. அவரைக் கொண்டு போய் இந்த ராஜபக்ஷ குடும்பத்தின் கோட்டை என்கின்ற ஹம்பாந்தோட்டையில் தள்ளினார்கள்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சஜித் பிரேமதாசாவின் செல்வாக்கு எத்தகையது என்பது இத்தேர்தலில் தெரிவரும் அந்த மாவட்டத்தின் ஒரு ஜனாதிபதி என்ற ஒரு உணர்வோடு அவர் வெற்றிபெறக்கூடிய நிலைமைக்கு மாறியிருக்கின்றது. அப்படியான வித்தியாசமான ஒரு சூழலைத் தான் சஜித் பிரேமதாசவுடைய வருகை உருவாக்கியிருக்கின்றது. இப்போது இருக்கின்ற ராஜ புத்திரர் மாதிரி சஜித் இல்லை. அவர் இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட அடிமட்ட மக்களோடு அரசியல் செய்வதற்கு தானாக தன்னை பழக்கப்படுத்திக் கொண்டவர். இப்பொழுது அவரை தோற்றடிக்க முடியாத ஒரு நிலையில் எவற்றையெல்லாம் சொல்லலாமோ அவற்றையெல்லாம் சொல்லப்பார்க்கின்றார்கள்.
அவருடைய நடை, உடை, பாவனைகளைக் கூட இப்பொழுது விமர்சிக்கப் பார்க்கின்றார்கள். ஆனால் இந்த நாட்டின் மக்கள் மிகத் தெளிவான முடிவோடு அதிக பெரும்பான்மையோடு அவரை வெற்றிபெற வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் அடுத்தரப்பு ஆட்சிக்கு தப்பித்தவறியேனும் வந்தால் முதலில் இந்த நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைக்கு வேட்டு வைப்பார்கள். தொகுதிவாரியான தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அது வந்தால் முதலாவது நஷ்டமடைவது கல்குடா தொகுதி முஸ்லிம்கள் என்பதையும் நாங்கள் மறந்து விடக்கூடாது.
கல்குடா தொகுதிக்கு நீண்டகாலமாக இருந்த ஒரு குறையான எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பதை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறியவர் இன்று திரும்பவும் தன்னுடைய இந்த மாவட்டத்து மக்களை மட்டுமல்ல முழு நாட்டிலும் இருக்கின்ற முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கின்ற ஒரு கீழ்தரமான காரியத்தில் இறங்கியிருக்கின்றார்.
இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஜே.வி.பி. அணியினரும் இந்த நல்லாட்சிக்கான மக்கள் கூட்டணியும்  அரசியல் மேதாவிகள் போல்  கதைக்கின்றனர். இந்த அதிமேதாவித்தன அரசியல் சம்பந்தமாக நான் பேசியதற்கு அலிசாஹிர் மௌலானாவிடம் ஒரு முறைப்பாடு வந்ததிருக்கின்றது. ஆனால் இவர்களின் இந்த அதிமேதாவித்தன அரசியலை நான் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும்.
முஸ்லிம்கள் அனுபவித்த கஷ்டங்களின் போது எவராவது ஒருவர் அல்லது இருவர் வாயைத்திறந்து பேசிவிட்டார்கள் என்பதற்காக இந்த மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கின்ற தேர்தலை அதிலிருக்கின்ற எங்களது தெரிவை நாங்கள் விரயமாக்க முடியாது, அதை வீணடிக்க முடியாது  என்பதை மிகத்தெளிவாக முஸ்லிம்களும், தமிழர்களும்  உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு எந்த காரணம் கொண்டும் இரண்டாவது தெரிவு என்ற கதைக்கு இடம் கிடையாது.
இனவாதத்தை ஊதிப்பெருப்பித்து அதன் மூலம் தங்களுடைய அரசியலை வடிவமைத்துக் கொள்கின்ற இந்த மொட்டுக்  கும்பலை விரட்டியடிப்பதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று எல்லா அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்றத்தில் ஆட்சியிலிருந்கின்ற அத்தனை பிரதான கட்சிகளும் ஒன்றாக இருக்கின்ற போது இந்த கும்பல் கடந்த வருடம்  ஒக்டோபர் 26ஆம் திகதி பின்கதவால் ஆட்சியை கவிழ்க்க முற்பாட்டார்கள்.
பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு வாக்கெடுப்பை நடத்த இடமளிக்காது சிறுபான்மையாக பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஒரு கூட்டம் அதாவது பெரும்பான்மை இல்லாத கூட்டம் ஐம்பத்திரெண்டு நாட்கள் செய்த அட்டகாசத்தை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். ரிஷாட் பதியுதீனும் நானும் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் பாதுகாப்பதற்காக மக்காவிற்கு கொண்டு சென்றோம்.
இது சாமானியமான விடயமல்ல. போதாக்குறைக்கு நாங்கள் கொண்டு வந்து வைத்த ஜனாதிபதி. அவருக்கு இப்போது இரண்டும் கெட்டான் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்போது ஒரு தேசிய பட்டியலை தருமாறு கேட்கின்ற நிலைமைக்கு வந்திருக்கின்றார். அதை வழங்குவதற்கு யாருமில்லை. இப்படியான ஒரு நிலவரத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத்தான் கொண்டு வந்து தூக்கிப்பிடித்து அவரை ஆட்சிக் கதிரையில் அமர்த்தினோம். என்றாலும் அதனால் நாங்கள் எவ்வளவோ பாடம் படித்தோம். இடையிடையில் பிரதமருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளின் பிரகாரம் ஆட்சி என்பது கொஞ்சம் தட்டுதடுமாறிதான் போக வேண்டியிருந்தது.

எங்களுக்குள் இருக்கின்ற எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டு நாங்கள் வரிந்து கட்டிக் கொண்டு அதிகாலைலேயே வாக்குச்சாவடிக்குப் போய் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.தே.கட்சியின் ஒரு வேட்பாளரை ஜனாதிபதி கதிரையில் அமர்த்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.  மூலை முடுக்குகளில் இருந்த ஐ.தே.கட்சிக்கரர்கள் இப்பொழுது ஒன்று திரண்டு  நிற்கின்றார்கள். இப்படியான ஒரு மாற்றம் நிகழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கோத்தபாயவின் அரசியல் என்பது மேட்டுக்குடி அரசியல். இந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் ஜனாதிபதி கதிரையை வேறு யாரும் பிடிக்கக்கூடாது என்றிருக்கின்ற கும்பலுக்கும் இது நல்லதொரு பதிலடியாக இருக்கும் என்பதை மக்கள் எல்லோரும் உணர்ந்திருக்கின்றார்கள். பெரும்பான்மையின மக்கள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் இருக்கின்ற அத்தனை சமூக வேறுபாடுகளையும் உடைத்தெறிந்து புதியதொரு யுகத்தை உருவாக்க நாம் புறப்படுவோம் என்றார்.