A+ A-

தலைவனின் பயணம் : சமூகத்தின் பாதுகாப்பு...!


எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

இன்று நாம் ஒரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தேர்தலானது சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சாவல்களில் சமூகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் தலைமைகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அன்று முன்மொழிந்த கூட்டு இராஜினாமா விடயம் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தினாலும், இவற்றுக்கு நிரந்தரமான தீர்வைக்கான வேண்டிய தார்மீகப்பொறுப்பு அரசியல் தலைமைகளிடம் இருக்கிறது.

அன்று இனவாதச்செயற்பாடுகளால் ஆட்சியைத் தக்க வைக்க முயன்று ஆட்சியை இழந்த ஆட்சியாளர்கள் இன்றும் அதே இனவாதத்தினூடாக ஆட்சியைப்பிடிக்க முயன்று கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

அதே சந்தர்ப்பத்தில், இனவாதமற்ற நாட்டைக்கட்டியெழுப்பும் நோக்கில் சகல சமூகங்களையும் அரவணைத்துச் செயற்படும் கொள்கையுடன் சஜித் பிரேமதாஷ களமிறங்கியிருப்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் யார் பொருத்தமான வேட்பாளர் என்ற விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஆரம்பத்திலிருந்து கவனஞ்செலுத்தி வந்தது.

அந்த அடிப்படையில் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் வேட்பாளர் தொடர்பாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்ட போது, தற்போதைய சூழ்நிலையில் இனவாதத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க பெரும்பான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற சஜித் பிரேமதாஷ களமிறக்கப்பட வேண்டுமென காத்திரமான கருத்துகளை உள்ளக ரீதியாகவும், பொது வெளிகளிலும் தெரிவித்து வந்ததை நாம் பார்க்கலாம்.

சஜித் பிரமேதாஷவைப் பொறுத்தளவில் அன்று ரணசிங்க பிரேமதாஷ கட்சிக்குள்ளிருந்த பல சவால்களுக்கு மத்தியிலேயே போராடி 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் என்ற இடத்தைப்பெற்றார். அன்றைய சூழ்நிலையில், சிறிமாவோ பண்டாரநாயக்கா ரணசிங்க பிரமேதாஷவை எதிர்த்துப்போட்டியிட்டார். கடந்த ஆட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாருக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட விடயம் மக்கள் மத்தியில் அவருக்கான அனுதாபங்களை ஏற்படுத்தியிருந்தது. இவை ரணசிங்க பிரேமதாஷவுக்கான சவாலாகக் காணப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் முன்வந்து ஆதரவு வழங்கியதனூடாக, குறுகிய வாக்கு வித்தியாசத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவை வெற்றி கொள்ள முடிந்தது. இவற்றை இறுதி வரை ரணசிங்க பிரமேதாஷ மறக்கவில்லை என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்திப் பேசியதையும் குறிப்பிடலாம்.

அவ்வாறான அன்றைய சூழ்நிலை தான் இன்று சஜித் பிரேமதாஷவுக்கும் ஏற்பட்ட போது, கடந்த 52 நாள் ஜனநாயகப்போராட்டத்தின் போது, சஜித் பிரேமதாஷவுக்கு இருந்த மக்கள் அலையை அவதானித்த தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 52 நாள் ஜனநாயகத்திற்கு விரோதமாக பிரதமரைப் பொறுப்பேற்ற இந்தக்கும்பலை எதிர்காலத்தில் தோற்கடிக்கும் சக்தியாக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற ஒருவராக சஜித் பிரேமதாஷவை அடையாளங்கண்டார்.

எதிரணி வேட்பாளராக ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து தான் வருவார்கள் என்ற கணிப்பு இருந்த படியினாலும், அவர்களின் இனவாதச் செயற்பாடுகளை கடந்த காலத்திலும் அவர்களுடன் இருக்கும் பங்காளிகளின் முஸ்லிம் விரோதச்செயற்பாடுகளை கடந்த ஏப்ரல் தாக்குதலின் பின்னர் கடுமையாகவும் காணப்பட்டதனாலும், முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியதான, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் ஆதரவைப்பெற்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளராக தந்தை வழி நின்று எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவராக சஜித் பிரேமதாஷவே ஜனாதிபதிக்குப் பொருத்தமானவராகக்கருதி, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, எதிர்பார்ப்பு, அபிலாஷை போன்றவற்றில் சஜித் பிரேமதாஷவுடன் உடன்பாடு கண்ட நிலையில், அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு பூராவும் சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

எனவே, தலைவரின் இப்பயணம் சமூகப்பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இனவாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடனானது என்பதைப் புரிந்து கொண்டு முஸ்லிம் சமூகமும் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்புக்களை சஜித் பிரேமதாஷவுக்கு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது .

"ஒன்றாய் முன்னோக்கி எமது பயணம் தொடரும்......